புது டெல்லி: டெல்லி என்சிஆர் பகுதியில் காற்று மாசுபாடு காரணமாக காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த காற்று மாசுபாடு, சுவாச நோய்களை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மாரடைப்பு, மூளை பக்கவாதம், கீல்வாதம் போன்ற கரோனரி தமனி நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவத்துறையின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் பியூஸ் ரஞ்சன் கூறுகையில், "காற்று மாசுபாடு பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன. காற்று மாசுபாடு சுவாச அமைப்பை பாதிப்பது மட்டுமில்லாமல், மாரடைப்பு, மூளை பக்கவாதம், மூட்டுவலி போன்றவற்றை ஏற்படுத்தும். காற்று மாசுபாடு மூளை மற்றும் இதயத்தை சேதப்படுத்துகிறது.
ஆகையினால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் இது எல்லா வயதினரையும் பாதிக்கும்" என்று தெரிவித்தார். டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. காற்றின் தரம் முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR - INDIA), ஞாயிற்றுக்கிழமை (நவ. 5) அன்று காற்றின் தரம் (AQI) 410 ஆக இருந்ததாக கூறியுள்ளது.
சனிக்கிழமை (நவ. 4) அன்று காற்றின் தரம் (AQI) 504 ஆக இருந்துள்ளது. சனிக்கிழமையோடு ஒப்பிடும் போது, ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. ஆனால் இதுவும் மோசமான நிலையே ஆகும். SAFAR - இந்தியா வெளியிட்ட தரவுகளின் படி, சனிக்கிழமை காற்றின் தரம் மற்றும் முன்னறிவிப்பு டெல்லி லோதி சாலை பகுதியில், காற்றின் தரம் 385 ஆக பதிவாகியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகப் பகுதியில், 456 ஆக பதிவாகியுள்ளது.
ஆரோக்கியமான மனிதருக்கு காற்றின் தரம் (AQI) 50க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் AQI 400ஐ தாண்டி உள்ளது. இத சுவாசம் சம்பந்தப்பட்ட, அதாவது நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் மிக மோசமாக உள்ள காற்றின் தரத்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியினால் கருச்சிதைவு ஏற்படுமா?... ஆய்வுகள் கூறுவது என்ன?