சென்னை: மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயினால் உலகம் முழுவதிலும் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆதலால், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், இரத்தத்தில் இன்சுலின் அளவைக் குறைக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.எஸ் குளோபல் (IS Global) ஆராய்ச்சியாளர்கள், சாப்பிடும் நேரத்திற்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய முயன்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 312 நபர்களின் உணவுப் பழக்கத்தை பகுப்பாய்வு செய்துள்ளனர். காலை 9 மணிக்குப் பிறகு காலை உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடுகையில், காலை 8 மணிக்கு முன்பே காலை உணவை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 59 சதவீதம் குறைகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்த குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை ஒழுங்குபடுத்துவதில் உணவு நேரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவை தவிர்ப்பது அல்லது காலை 9 மணிக்கு மேல் சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டை இழக்கும். மேலும், இன்சுலின் ஹார்மோன் சுரப்பு அளவு ஒழுங்கற்றதாக அமையும். இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
காலை உணவு மட்டுமல்லாமல், இரவு உணவை தாமதமாக சாப்பிடுபவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது, இரவு உணவை இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு ஐந்து வேளை குறைந்த அளவு உணவை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து ஐ.எஸ் குளோபல் ஆராய்ச்சியாளர்கள், தினமும் காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்கு முன்பும் சாப்பிடுவது நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர். முன்னதாக ஐ.எஸ் குளோபல் நடத்திய ஆய்வில், இந்த வகை உணவு முறையால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்பதும் தெரிய வந்துள்ளது.
உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க காலை உணவை தவிர்க்காமல், 8 மணிக்கு முன்பாகவும், இரவு உணவை 7 மணிக்கு முன்பாகவும் உண்ணுங்கள்.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு.. ஆய்வில் வெளிவந்த உயிர்வாழ்வு விகிதம்!