வாஷிங்டன்: வெள்ளை சர்க்கரை நாம் அன்றாட உணவில் அதிகம் சேர்க்கும் ஒரு பொருளாக இருக்கிறது. டீ, காஃபி, ஸ்வீட்ஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் அதில் வெள்ளை சர்க்கரையின் பங்கு அதீதமாக உள்ளது. இந்த வெள்ளை சர்க்கரையால் நீரிழிவு நோயைத் தாண்டி வேறு ஏதேனும் விளைவுகள் உள்ளதா என்ற அடிப்படையில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் உணவில் வெள்ளை சர்க்கரை அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வட அமெரிக்காவில் 7 முதல் 15 விழுக்காடும், ஐரோப்பாவில் 5 முதல் 9 விழுக்காடும் அதேபோல், ஆசியாவில் 1 முதல் 5 விழுக்காடு என மக்கள் சிறுநீரக கற்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் சார்பில் சர்க்கரை மற்றும் சிறுநீரக கல் இடையே தொடர்புகள் இருக்கிறதா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த ஆய்வில், பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் வெள்ளை சர்க்கரை காணும் நிலையில் ஒருவர் நாள் ஒன்றுக்குப் பல முறை வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதாகவும், இதனால் சிறுநீரக கல் தொடர்பான பிரச்சனைக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வார இறுதியில் தாமதமாக தூங்குவது, வேலை நாட்களில் சீக்கிரம் எழுவது: உடலில் என்ன நடக்கும்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
இதனைத் தொடர்ந்து, காய்ச்சல், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து செல்வது, அடி வயிற்றில் அதீத வலி உள்ளிட்டவை அறிகுறிகளாக உள்ளது. நாளடைவில், சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு இது வழிவகை செய்யும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனால் வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்வதால் மட்டும்தான் சிறுநீரக கல் உருவாகிறது எனக் கூற முடியாது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் சர்க்கரை மற்றும் சிறுநீரக கல் இடையேயான தொடர்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளித்து உள்ளனர்.
மேலும், சிறுநீரகத்தில் உருவாகும் எந்த கற்கள் சர்க்கரையுடன் அதிகம் தொடர்புடையதாக உள்ளது? சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க வெள்ளை சர்க்கரையில் சேர்க்கப்படும் எந்த பொருளின் அளவை குறைக்க வேண்டும்? உள்ளிட்ட பல விஷயங்கள் இனியும் ஆய்வில் தான் உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பதின்ம வயதினர் இடையே அடிக்கடி ஏற்படும் தலைவலி, தற்கொலை எண்ணத்துடன் தொடர்புடையதா?