சென்னை: வேகமாக பரவும் தொற்று நோய்களைப் போல உடல்பருமன் பிரச்சனையும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 135 மில்லியன் இந்தியர்கள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல, தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், என்ற பத்திரிக்கையின் ஆய்வுக் கட்டுரையில், இந்தியாவில் 14.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் அது 17 மில்லியனை கடந்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி, உலக அளவில் அதிகமாக உடல் பருமனான குழந்தைகள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகளில், மேக்ஸ் ஹெல்த்கேர் நடத்திய ஆய்வில் 40 சதவீத குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எதற்காக இந்த புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டுகிறோம் என்றால், எதிர்காலத்தின் ஆரோக்கியமான உலகத்தை கட்டமைக்க வேண்டிய குழந்தைகளின் ஆரம்ப நிலையே ஆட்டத்தில் உள்ளது என்பதை குறிப்பிடத்தான். வாழ்வியல் கலாச்சார மாற்றம் என்பதை நம்மை மட்டும் அல்ல நமது சந்ததியைக்கூட நோயாளிகளாக மாற்றி எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிடும் என்பதற்கு இது மிக சிறந்த எடுத்துக்காட்டு. 15 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பார்க்கலாம்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி உடல்பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய், நுரையீரல் தொடர்பான நோய்கள், பக்கவாதம், கீல்வாதம், இதயநோய், உயர் இரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆபாயகரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கூறப்படுகிறது.
உடல் பருமன் ஏற்படக்காரணம்: பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் உடல் பருமன் ஏற்பட பொதுவான காரணங்கள்தான் இருக்கிறது. ஒழுங்கு மற்றும் ஆரோக்கியம் அற்ற உணவுப் பழக்க வழக்கம். உடல் உழைப்பு இல்லாமல் உணவு உட்கொள்வது. உடற்பயிற்சியை தவிர்ப்பது. உள்ளிட்டவைதான் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. பெரியவர்களே முறையான வாழ்வியல் சூழலை கடைபிடிக்காத நிலையில் குழந்தைகளை யார் கவனிப்பது என்பதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சனை.
குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனை தவிர்க்க உணவியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள்:
- உணவகங்களில் சென்று துரித அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
- முடிந்த வரை வீட்டில் ஆரோக்கியமான முறையில் உணவு தயாரித்து உட்கொள்ள வேண்டும்
- மொபைல் ஃபோன் மற்றும் டி.வி பார்ப்பதை தவிர்த்து, வெளியில் சென்று ஓடி ஆடி விளையாட வேண்டும்
- பொட்டலங்களில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
- காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்
- நொறுக்குத் தீனிகளை வீட்டில் தயாரித்து வைத்து உட்கொள்வது சிறந்தது
- ஒரு நாள் ஒரு நேரமாவது சிறுதானிய உணவை உட்கொள்ள வேண்டும்
- மொபைல் ஃபோன் அல்லது டி.வி பார்த்தவாறு உணவு உட்கொள்வதைக் கண்டிப்பாகக் கைவிட வேண்டும்
- பசி எடுத்தபின் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்
- வயிற்றைச் சுத்தமாக வைத்திருப்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்
- உயரத்திற்கு ஏற்ற எடையை உறுதி செய்துகொள்ள வேண்டும்
இதையும் படிங்க: ஒரு வாரம் பப்பாளி சாப்பிட்டால் 2 கிலோ எடை குறையுமா? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது..?