சென்னை: பீட்ரூட் என்றாலே நல்ல சத்துள்ள காய், உடல் பலவீனமானவர்களையும் பலமாக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்று தான் எல்லாருக்கும் தெரியும். உடல் பராமரிப்பில் பல்வேறு பலன்களை அளிக்கும் பீட்ரூட், சரும பராமரிப்பிற்கு பல்வேறு நலன்களை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?...
ஆம். பீட்ரூட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், சரும அழகையும் மேம்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எல்லா சரும பிரச்சனைகளைச் சரி செய்யும்.
கரும்புள்ளிகளை நீக்க: தற்போது அதிகரித்து வரும் மாசுகளால் சருமத்தில் தூசுக்கள், அழுக்குகள் தங்கி கரும்புள்ளி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பீட்ரூட்டைப் பயன்படுத்தி இதை எப்படிச் சரி செய்யலாம் என்று பார்க்கலாம். இதற்கு 2 ஸ்பூன் பீட்ரூட் சாறு மற்றும் 2 ஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றைக் கலந்து, சருமத்தில் தடவி, அவை முழுவதுமாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கைச் சருமத்தில் போடுவதால், கரும்புள்ளிகள் சருமத்தின் நிறத்தை அடைந்து, கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சரும பளபளப்புக்கு: பொதுவாகவே இறந்த செல்கள் முகத்தில் தங்கி, சருமத்தை பொலிவிழக்க செய்யும். இதன் காரணமாகவே அழகியல் நிபுணர்கள் முகத்திற்கு அடிக்கடி ப்ளீச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவர். ஆனால் ப்ளீச் செய்யப் பயன்படுத்தும் க்ரீம்களில் அதிகளவு கெமிக்கல் இருக்கும் என்பதால் பலரும் இதைத் தவிர்த்து விடுவர்.
இனிமேல் அவ்வாறு தவிர்க்க வேண்டியதில்லை. பீட்ரூட்டை பயன்படுத்தி இயற்கையாகவே முகத்திற்கு ப்ளீச் செய்யலாம். இதற்கு ஒரு தேக்கரண்டி அரிசி மாவில், ஒரு ஸ்பூன் ஆப்பிள் கூழ், இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, நன்கு கலக்கி, சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளபளப்பாகும்.
பருக்களை விரட்ட: இரண்டு ஸ்பூன் தயிருடன், இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு மூன்றுமுறை தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்களும், தழும்புகளும் நீங்கி, சமச்சீரான சரும நிறத்தைப் பெறலாம்.
கருவளையம் போக்க: மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் கருவளையம் போன்ற பிரச்சினைகளால் பலரும் அவதிப்படுகின்றனர். அவர்கள் பீட்ரூட் சாற்றில், பஞ்சினை நனைத்து, கண்களைச் சுற்றித் தடவி வரக் கருவளையம் விரைவில் மறைந்து விடும்.
பிங்கான உதடுகளுக்கு: இளஞ்சிவப்பான உதடுகளைப்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், பீட்ரூட் சாற்றில் சிறிது சர்க்கரை கலந்து, உதடுகளில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதை அடிக்கடி செய்து வந்தால் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
பீட்ரூட் ஜெல்: அரை டம்ளர் தண்ணீரில், அரை கப் பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள், கொதிக்க வைத்து, அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து ஆற விட வேண்டும். ஆறியபின் தண்ணீரை வடிகட்டி, அதில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் அடைத்து உங்கள் வீட்டு ப்ரிட்ஜில் சேமித்து வைக்கலாம். இரவு படுக்கும் முன் இந்த ஜெல்லை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
இதையும் படிங்க: பழங்களில் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க..உங்க முகம் தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னும்!