சென்னை: உலக அளவில் இரத்த அழுத்தம் ஒரு சமூக நோயாகி மாறி இருக்கிறது. உணவுப் பழக்க வழக்கம், வாழ்வியல் நடைமுறை, வேலை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இந்தியாவில் மட்டும் ஆண், பெண் உட்பட சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்த நோயுடன் போராடி வருகின்றனர். இந்த உயர் இரத்த அழுத்தத்தால் மாரடைப்பு, பக்க வாதம் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் மறைந்திருந்து மக்களைப் பாதிக்கும் இரத்த அழுத்தத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய நோயாக ஞாபக மறதி நோய் இருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அந்த வகையில், நியூ சவுத் வேல்ஸ், லா ட்ரோப் மற்றும் ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து இது குறித்து சுமார் 17 ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ஒன்றிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார், 60 வயதிற்கும் மேற்பட்ட இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் டிமென்ஷியா எனும் நினைவாற்றல் இழப்பு நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடல் எடை குறைய வேண்டுமா? ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க.!
டிமென்ஷியா (dementia) என்றால் என்ன? டிமென்ஷியா என்பது நினைவாற்றலை இழக்கச் செய்யும் ஒரு நோயாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது ஏற்படும் விளைவு என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்த டிமென்ஷியா நோயால் 60 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலையில், 60 வயதிற்குக் குறைந்த நபர்களும் இந்த நோய்க்கு கணிசமாகப் பாதிக்கப்பட்டுதான் வருகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த டிமென்ஷியா நோய் உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்து ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
டிமென்ஷியா நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி.? ஆரம்பத்தில் உங்களுக்கு டிமென்ஷியா நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதே சிரமமான ஒரு விஷயம்தான். வைத்த பொருளை எடுக்க மறத்தல், செய்ய வேண்டிய பணியைச் செய்ய மறத்தல் உள்ளிட்ட சில விஷயங்கள் சாதாரணமாகக் கருதப்படலாம்.
ஆனால், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்த மறதி பிரச்சனை அதிகம் இருக்கிறது எனத் தெரிய வந்தாலோ அல்லது மறதி பிரச்சனை அதிகம் இருந்தாலோ நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து அதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களைக் கட்டாயம் முற்றிலும் கைவிட வேண்டும். உணவில் உப்பின் அளவை குறைப்பதுடன் உப்பு அதிகம் நிறைந்த உருக்காய், கருவாடு, அப்பளம் போன்றவற்றை அரவே கைவிட வேண்டும்.
இதையும் படிங்க: செரிமான பிரச்னையா? இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்..