விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால். இவரது மனைவி சந்திரா (60). இவர் சொந்த பணத் தேவைக்காக எரிச்சநத்தத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் கடந்த 3.9.2018 ஆம் தேதி 17 பவுன் தங்கநகைகளை ரூ 2.45 லட்சத்திற்கும், பின்னர் அதே நாளில் மீண்டும் 19 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ 1.30 லட்சமும் பெற்றுள்ளார்.
வங்கி ஆவணப்படி மொத்தம் ரூ.31 பவுன் தங்கநகை அடகு வைத்ததாக சந்திராவுக்கு வங்கி மூலம் ரசீது வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் தேதி வங்கிக்குச் சென்ற அவர் நகைகளை மீட்க வந்ததாகக் கூறியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் இன்று அதிக வேலை உள்ளதால் நகை அடகு வைத்த ரசீதுகளை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார், அதன்படி சந்திரா ரசீதுகளைக் கொடுத்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாள்கள் கழித்து வங்கிக்கு சென்ற மூதாட்டியிடம், அவர் கையெழுத்திட்டு நகைகளை மீட்டுச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்திராவே நகைகளை மீட்டதாகவ வங்கி அலுவலர்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 21ஆம் தேதி அப்போதைய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் மூதாட்டி சந்திரா புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க எம்.புதுப்பட்டி காவல்துறைக்கு உத்தரவிட்டப்பட்டது. ஆனால், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தாமல் நேரம் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கி மேலாளர் நகைகளை கொடுக்காமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட தற்போதைய காவல் கண்காணிப்பாளர் பெருமாளிடம் மூதாட்டி சந்திரா தனது மகன் செந்தில்பாலமுருகனுடன் சென்று மீண்டும் புகாரளித்தார். புகார்மனுவில்,வங்கி மேலாளர் மோசடி செய்து நகைகளை எடுத்துக்கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி நகைகளை மீட்டுக்கொடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்ற எஸ்.பி. பெருமாள் உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: