விருதுநகர்: திருச்சுழி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு கல்லூரி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது. வாழ்வில் ஓர் திருநாள் என்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார்.
உயர்கல்வியில் முன்னேறுவதற்கு இக்கல்லூரி உறுதுணையாக இருக்கும். தற்போது 236 இளங்கலை படிப்பிற்கு கிட்டத்தட்ட ஆயிரத்து 139 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதை வைத்தே இப்பகுதியில் உயர்கல்விக்கு தேவை அதிகம் என்பதை உணர முடிகிறது. அடுத்தாண்டு இப்பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் செல்லாது - வைத்திலிங்கம்