உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நான்கு நாள்கள் அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமாவாசைக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல மறு அறிவிப்பு வரும்வரை பக்தர்களுக்குத் தடைவிதிப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சாத்தூர் அருகே உள்ள பிரசித்திப்பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகின்றன.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைகளைக் கழுவிய பின்னரே சாமி தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு முகக்கவசம், கை உறைகள் வழங்கப்பட்டு அவை அணிந்த பிறகே மொட்டை போடும் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் துண்டுப்பிரசுரங்களும் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன. கோயிலுக்கு உள்ளே வரும் பக்தர்களுக்கு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: 'மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும்'