விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணியாபுரம் கிராமத்தில் தனியார் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கிராமத்துப் பொதுமக்கள் தனியார் மதுபான கடை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2016 முதல் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வகையில் போராட்டம் நடத்திவருவதாகவும் அதனை மீறி தனியார் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதியில் குழந்தைகள் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பொறியியல் கல்லூரிகள் அருகில் உள்ளது. பார் திறப்பதால் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். இப்பகுதி பல்வேறுபட்ட சமுதாயத்தினர், மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் பகுதியாக உள்ளது. பார் அமையும் பட்சத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு அமைதியைச் சீர்குலைக்க நேரிடும் எனக் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இதனைத் தவிர்க்கத் திறக்கப்பட்ட மதுக்கடை பாரினை மூட வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நேற்று (டிசம்பர் 31) மதியம்முதல் இன்றுவரை 20 மணி நேரமாகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் விரைந்துவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்படாத ஊர் பொதுமக்கள் பார் மூடும் வரை போராட்டம் தொடரும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வைஷ்ணோ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு