ஜம்மு -காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனாம்பட்டி கிராமத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உடையனாம்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர்கள் முருக கணேஷ், முத்து மாரியப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலின்போது அங்கு பணியில் இருந்த உடையானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மணிகண்டனும் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: கல்விப் பட்டறைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!