விருதுநகர்: வடமலைகுறிச்சியில் அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, ”இன்று அதிமுகவிற்கு 52 வயதாகும். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய போது திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன பொய்களை நம்பி வாக்கு அளித்தனர்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். தற்போது 29 மாதங்கள் கழித்து 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாகக் கணக்கு சொல்கிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஒரு ஏமாற்று வேலை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனச் சொன்னவர்கள், 2 ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் மக்களை ஏமாற்றுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நீட் தேர்வை ஒழிப்பதற்குக் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய், செய்வது எல்லாம் நாடகம், நடப்பது எல்லாம் நடிப்பு என விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் திமுக ஆட்சி தொழிலதிபர்களுக்கான ஆட்சி என விமர்சனம் செய்த கே.டி ராஜேந்திர பாலாஜி, ஏழைகளுக்கான ஆட்சி வேண்டும் என்றால் நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சூழ்நிலை அமையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி நாட்டிற்குப் பிரதமராக வர வாய்ப்புள்ளது” எனப் பேசினார்.
இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!