விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எட்டு பேர் மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அந்த மாணவர்களை இடைநீக்கம் செய்தது.
அதைத் தொடர்ந்து, அந்த மாணவர்கள் தங்கள் தவறை மன்னித்து மீண்டும் கல்லூரியில் அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தங்களது தவறை உணரவும் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி அந்த எட்டு மாணவர்களும் காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியேற்றனர். மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவு இந்த எட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என நீதிபதி சுரேஷ் தெரிவித்தார்.