விருதுநகர்: சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து வாகனத்தில் வரம்புக்கு மீறிய பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் சங்கரமூர்த்திபட்டி பேருந்து நிறுத்தம் அருகே, சாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ராம்குமார் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட மூன்று லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் துணை அலுவலர், தாசில்தார் வெங்கடேஷிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.