விழுப்புரம்: அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் நேற்று(ஜூலை 23) மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று(ஜூலை 24) அதிகாலையில் கலிவரதனின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, சக பாஜக ஊழியர்கள் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு, விழுப்புரம் மாவட்ட பாஜகவின் மகளிரணிச் செயலாளராக இருந்த காயத்ரி என்பவர், கலிவரதன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். கலிவரதன் தன்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாகவும், தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்ததார்.
கலிவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், இது தொடர்பாக பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், காயத்ரி காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காயத்திரி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விழுப்புரம் பாஜகவில் சலசலப்பு.. தெற்கு மாவட்ட பாஜக தலைவரின் ஆடியோ வைரல்!