இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 100க்கும் மேல் உயர்ந்துள்ளது. மத்திய அரசு இப்பெருந்தொற்றை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விழுப்புரம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினிகளை செயல்முறை விளக்கம் மூலம் உபயோகிக்க மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
அப்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயங்கிவரும் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் சுகாதாரமான முறையில் பயணம் செய்ய ஏதுவாக பேருந்துகளில் உள்ள படிகள், கைப்பிடிகள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள், ஓட்டுநர் அமரக்கூடிய இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தினந்தோறும் சுத்தம்செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளை தினந்தோறும் சுத்தம்செய்து கிருமி நாசினி பயன்படுத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் பயணிகளுக்கு உடல் பரிசோதனை மையம் அமைத்து உள்ளூர், வெளியூர் பயணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க ரயில் நிலையம், சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க... கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி!