விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தவர் ராதாமணி (70).
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராதாமணியின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிகுப்பத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த ராதாமணியின் உடலுக்கு இன்று (ஜூன் 14) அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது திமுக மாவட்ட அவைத் தலைவராக இருந்து வரும் ராதாமணி, கண்டமங்கலம் பகுதி முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். எம்.ஏ. பட்டம் முடித்துள்ள இவர் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கல்லூரித் தோழன் ஆவார்.
ராதாமணி 2016இல் நடைப்பெற்ற சட்டபேரவைத் தோ்தலில் விக்ரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 63 ஆயிரத்து 757 வாக்குகள் (35.69 விழுக்காடு) பெற்று அதிமுக வேட்பாளர் ஆர். வேலுவை விட ஆறாயிரத்து 912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராவார்.
ராதாமணி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் கட்சிக்காக உழைத்துவந்தவர்.