தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் அகற்றிவருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிளியனூர் அருகே உள்ள கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் கட்சிக் கொடிக்கம்பங்களை கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் அகற்றிவிட்டு, பின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது கீழ்கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த தேமுதிக மாவட்டப் பிரதிநிதி மூர்த்தி என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம், 'நீ எப்படி தேமுதிக கொடிக்கம்பத்தை அகற்றலாம்?' என்று கேட்டு அவரை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார்.
மேலும் தீனதயாளனை கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, 'உன்னை உயிரோடு கொளுத்திவிடுவேன்' என்று கொலை மிரட்டல்விடுத்துள்ளார்.
இதனையடுத்து தீனதயாளன் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் மூர்த்தியை கைதுசெய்தனர்.