விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சி. பழனி தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 41 பயனாளிகளுக்கு 13 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். கால்நடை வளர்ப்பிற்கு வங்கி மூலம் கடனுதவி பெற்று சிறு, குறு, பால் உற்பத்தியாளராக உருவாகிட கால்நடைத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
வங்கிகளின் கடன் உதவிக்கான உதவிகளையும் செய்ய கால்நடைத்துறை முன்வந்துள்ளது. இவற்றினை இளைஞர்கள், விவசாயிகள் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும். மேலும், இளைஞர்கள் சுயதொழில் புரிவதற்கு கால்நடை வளர்ப்பு ஈடுபடுவதற்கு அரசு பல்வேறு மானிய கடன்களை வழங்கி வருகிறது.
இதனை பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 11 ஆயிரம் பால் உற்பத்தியாளர் சங்கம் உள்ளதாகவும், கொள்முதல் விலை உயர்வை முதலமைச்சரிடம் பேசி உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். நெய் விற்பனை கடந்தாண்டை விட தற்போது ஏழு சதவீதம் அதிகரித்து உள்ளது என தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர், மேலும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும் தீபாவளி பண்டிகைக்கு 20 சதவீதம் விற்பனை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.