தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த 10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பாராட்டுச் சான்றிதழ், கேடயம் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை தலைவர் முனைவர் பூபதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் மோகனா, பொதுச்செயலாளர் அமலராஜன், பொருளாளர் சுப்பரமணி, மாவட்ட கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.