விழுப்புரம்: திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை; ''பிரதமர் மோடி போபாலில் நடைபெற்றக் கூட்டத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டில், ஒரு வீட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதில் சில கட்சிகளின் நிலைப்பாட்டில் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அதில் தவறில்லை. உதாரணத்திற்கு அதிமுக இரண்டு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை பாஜக ஆதரிக்கிறது. வேற்றுமை எல்லா இடங்களிலும் உள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் பொது சிவில் சட்டம் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களும் கூட இது குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். இச்சட்டம் யாரையும் பிரிப்பதற்காக இல்லை. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியப் பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம்.
யாருக்கு எதிராகவும் இந்தச் சட்டம் இருக்கப்போவது கிடையாது. வருகின்ற காலத்தில் அதிமுக நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். பாஜக கட்சி எப்படி இந்தச் சட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள் என அதிமுக நம்பிக்கைக் கொள்ளவேண்டும். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பல்வேறு கருத்து முரண்பாடு இருந்தால் கூட, வருகின்ற காலத்தில் எல்லாம் சரி செய்யப்படும்.
அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலத்தில் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் இல்லை என கர்நாடகா அரசு சொல்லியுள்ளது. இதனால் தமிழ்நாடு பாதிக்கப்படும். கர்நாடக துணை முதலமைச்சர் தண்ணீர் கொடுக்கமாட்டேன் எனக் கூறுவதற்கு அதிகாரம் இல்லை.
இதற்காக திமுகவும், காங்கிரஸ் ஏன் கண்டிக்கவில்லை. இதற்காக பாஜக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயின் மீது அக்கறை முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் இல்லை. இது எப்படி தமிழகத்தில் நலம் சார்ந்த அரசாக இருக்க முடியும். பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தண்ணீர் வரவேண்டும். அதே சமயத்தில் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது'' என்றார்.
''தமிழ்நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டி.கே. சிவகுமாரை சந்தித்துப் பேச வேண்டும். தமிழக அரசு கர்நாடக அமைச்சரையோ, முதலமைச்சரையோ கண்டித்து ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை. மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக விவசாய நிலங்களை திமுக அரசு விட்டுக் கொடுக்கிறதா?'' என கேள்வி எழுப்பினார். ''தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஆளுநர் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆளுநர் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்'' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மின்னல் தாக்கி 26 பேர் பலி... பீகாரில் பேரிடர் அவசரநிலை?