விழுப்புரம்: பொம்மையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மெட்டல் கிராப்ட்ஸ் என்ற கடையில், கோயில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால உலோக சிலைகள் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், நீதிமன்றத்தில் சோதனைக்கான முறையான அனுமதி பெறப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், செப்.16ஆம் தேதி பொம்மையார்பாளையத்தில் உள்ள மெட்டல் கிராப்ட்ஸ் கடை வளாகத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில் இந்திய தொல்லியல் துறையால் அளிக்கப்பட்ட, அர்த்தநாரீஸ்வரர் சிலை தொடர்பான ஆவணங்களை தனிப்படையினர் கைப்பற்றினர். அவர்களுக்குக் கிடைத்த ஆவணம் மூலம் அக்கடையில் பழங்கால சிலைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பாக கடை உரிமையாளரான ராமச்சந்திரன் என்பவரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்திய நிலையில், கடையினுள் ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்த 7 பழங்கால உலோகச்சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும், அச்சிலைகளுக்கான முறையான ஆவணங்கள் எதுவும் கடை உரிமையாளர் ராமச்சந்திரனிடம் இல்லை. பெரிய அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிறிய அர்த்தநாரீஸ்வரர் சிலை, உடைந்த கையுடைய அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, கிருஷ்ணன் சிலை, புத்தர் சிலை, மயில் வாகனம் சிலை உள்ளிட்ட 7 பழங்கால உலோக சிலைகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், சிலைகள் எந்த கோயிலில் இருந்து யாரால், எப்போது திருடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 7 உலோக சிலைகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன... பயணிகள் கடும் அவதி...