விழுப்புரம் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர்கள் பவுல் பெருமாள் - சாந்தி தம்பதி. இவர்களது மகள் ஞானபாரதி (23). சீனாவின் சங்சவுன் (Changchun district) பகுதியில் உள்ள ஜிலின் பல்கலைக்கழகத்தில் (Jilin university) இரண்டாம் ஆண்டு மருத்துவப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சீனாவில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் பீதியால், கடந்த 31ஆம் ஞானபாரதி சென்னை வந்துள்ளார்.
பின்னர் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு வந்த இவருக்கு, நேற்றிரவு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் ஞானபாரதியை விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் தனிவார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவி ஞானபாரதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவி தேவி, 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸூக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து உபகரணங்களும் கையிருப்பில் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் இதனால் பீதியடையத் தேவையில்லை. இதனை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். கை கழுவும் முறை, பாதுகாப்பான இருமல், தும்மல் போன்ற செயல்களை செய்தாலே இதனைக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு காய்ச்சல் இல்லை. இருப்பினும் அவர் 16 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்' என்றார்.
கேரளாவிலும் கரோனா: எல்லைப் பகுதிகளில் அலார்ட் ஆகும் தமிழ்நாடு