நக்கீரன் புலனாய்வு இதழில் சிலைக் கடத்தல் சம்பந்தமாக செய்தி வெளியிட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி, திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் மீது புகார் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 19ஆம் தேதி அமைச்சர் சி.வி. சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி நளினிதேவி முன்பு நேரில் ஆஜராகி, தன் மீதான அவதூறு செய்தி வெளியிட்டது குறித்து நீதிபதியிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில், நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.