விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கீழ் மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (32). இருளர் இனத்தைச் சேர்ந்த இவர் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பின்னர் திருமணம் முடிந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டிய கணவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற பிள்ளைகளையும் மனைவியும் தவிக்க விட்டு வேறொரு பெண்ணின் மீது ஏற்பட்ட சலபத்தால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
வறுமையின் காரணமாக தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுடன் கிருஷ்ணவேணி தனது பெற்றோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்தார். தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் மற்றும் தனக்கான நீண்ட நாள் ஆசையான எப்படியாவது ஒரு அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தார்.
அரசு வேலைகளில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற வேண்டும் என அறிந்த கிருஷ்ணவேணி, ‘அம்மா கணக்கு’ பட பாணியில் மகளுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்தார். அதன்படி தனித் தேர்வில் பொதுத் தேர்வு எழுதி 206 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
3 மகள்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி படித்த கிருஷ்ணவேணியின் செயல் அந்த கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து தாய்மார்களையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தானும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என துடிக்கும் கிருஷ்ணவேணிக்கு முறையான வழிகாட்டுதலுடன் அரசு வேலை பெற்றுத் தர வேண்டும் என்பதே கிருஷ்ணவேணி மற்றும் அவர் பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து கிருஷ்ணவேணி கூறுகையில், “எனது கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்றதால் எனது மூன்று பெண் பிள்ளைகளை வளர்க்க சிரமாக இருக்கிறது. தினக்கூழிக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறேம். சொந்த வீடு கூட இல்லை தாய் வீட்டில் வசித்து வருகிறோம்.
எனக்கு கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு எனது பிள்ளைகளுக்கு நோட்டு, புஸ்தகம், பேனா கூட வாங்கித்தர முடியவில்லை. நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் படிப்பு முக்கியமாக வேண்டும். ஆகையால், நான் படிக்க முடிவெடுத்தேன். அதன்படி 10ஆம் வகுப்பு படிக்க முடிவு செய்து எனது மகளுடன் சேர்ந்து படிக்க தொடங்கினேன்.
எனது மகள் பள்ளியில் கற்றுக்கொண்டதை, வீட்டில் வைத்து எனக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாள் அதனை நான் கற்றுக்கொள்வேன். பகலில் கூலி வேலைக்குச் செல்வதால், இரவு நேரத்தில் மட்டுமே படிக்க நேரம் இருக்கும். அப்போது மட்டும் படித்து வந்தேன். பின்னர், தேர்வும் வந்தது நானும், எனது மகளும் சேர்ந்து தேர்வு எழுதினோம். இருவர் தேர்ச்சிப் பெற்றுள்ளோம்.
எனது பிள்ளைகளுகுத் தேவையான பொருள்களை வாங்கிக்கொடுக்க கூட முடியாத சூழலில் இருக்கிறேன். தமிழ்நாடு அரசு இதனை கவணத்தில் கொண்டு எனக்கு அரசாங்க வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால், எனது மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்க்க உதவியாக இருக்கும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 3வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த பெண்: ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்.!