விழுப்புரம் மாவட்டத்தில் காணை, காணைகுப்பம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ரைஸ்மில்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று (மே.20) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
இதனைத்தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது, தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் பேக்கிங் செய்து அரிசி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டுள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும், இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும் விரைவில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகள் இரண்டாகப் பிரித்து, 68 புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப்படும். மேலும் நியாய விலைக் கடைகளில் தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவில், சில சிக்கல்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து, கருவிழி பதிவை கொண்டு பொருள்கள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.