விழுப்புரம்: மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மாண்டஸ் புயலின் (Mandous Cylone) தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வசதிகளை நேற்று (டிச.11) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் பார்வையிட்டனர். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தொடர்ந்து தொடர்புகொண்டு, புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். பின் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்கள் அமைத்து தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொண்டதன் அடிப்படையில் மாண்டஸ் புயலினால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ஓரிரு இடங்களில் சாய்ந்துள்ள வேரோடு மரங்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் அகற்றப்பட்டன. மேலும், பலத்த காற்றினால் தடை செய்யப்பட்ட மின்சாரம் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால், பால் பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
தமிழகத்திலுள்ள 106 முகாம்களில் 7000 மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்காக ரூ.317 கோடிக்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்பகுதியில் 440 வீடுகள் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயனாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், பலத்த காற்றினால் தடை செய்யப்பட்ட மின்சாரமும் தற்பொழுது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல பிறமொழி கற்றல் அவசியம்: தமிழிசை சவுந்தரராஜன்