விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியின் மரணத்திற்காக நடந்த கலவரத்தில், கைதானவர்களில் 174 பேரின் ஜாமீன் மனுக்கள், விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு வந்தது. அப்போது இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
மேலும் மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை பரிசீலனையில் உள்ளது. இதனிடையே சிறையில் உள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை சார்பில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் மகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக கொலை மிரட்டல் சிறைச்சாலையிலேயே விடுக்கப்பட்டு வருகிறது. அதனால் அவருடைய பாதுகாப்பு கருதி, அவரை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்;தொடர்பில்லாத பலரின் கைதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் எம்.பி.