விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் முகிலன் தலைமையின் கீழ், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் ரேவதி, தலைமை காவலர்கள் சண்முகம், அறிவழகன், செந்தில்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பன்னிப்பாடி கிராமத்தில் உள்ள தெற்கு ஓடை என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்கள் சுமார் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆறு நெகிழி பேரல்களில் ஆயிரத்து 200 லிட்டர் புளித்த சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஊறலின் உரிமையாளரை பற்றி விசாரித்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் செந்தாமரை என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேற்படி நபரை தேடிச்சென்றபோது தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. பின்பு புளித்த சாராய ஊறல்கள் சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டன.