விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பாக, கலைஞர் அறிவாலயத்தில் இன்று (நவ.09) கலைஞரின் கவிதைகள், திரைப்படம், நாடக வசனங்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் படிப்பு படித்து, உயர் அதிகாரி ஆனதற்குக் காரணமே பெரியார்தான். தமிழகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்று அனைவரும் படிப்பதற்குப் பெரியார் தான் காரணம். பெண் கல்விக்கு வித்திட்டவரே பகுத்தறிவு தந்தை பெரியார் தான்.
வடமாநிலத்தவரும் பெரியாரை தற்போது ஏற்றுக்கொண்டு உள்ளனர். தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற நப்பாசையில் அண்ணாமலை பேசிவருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக, பெண்ணுரிமைக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும்.
பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே, பகுத்தறிவானது அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்கே. இதனைக் கருத்தில் கொண்டு, வரலாற்றை நன்கு உணர்ந்து அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை செயலாளர் பெயர்கூட அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அவருக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்படவில்லை. புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி பட்டமளிப்பு விழாவில் ஆளுநரோ, துணை வேந்தரோ பேசவில்லை என்று கூறியுள்ளார். உங்களுடன் உள்ள ஐபிஎஸ் அதிகாரியே பேசியுள்ளார்.
முன்பெல்லாம் எங்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டு, பேச அனுமதிக்கப்பட்டது. இப்போது அனுமதிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆளுநர்தான். ஆளுநர் மட்டும்தான் பேசவேண்டும் என்ற எண்ணம்தான்.
நாம் பெரியார், திராவிட சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பளித்து, 5 நிமிடம் அனுமதி அளிக்கவேண்டும். ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் எங்களையும், உயர் கல்வி செயலாளரையும் அழைத்துப் பேச அனுமதிக்க வேண்டும். இனி பட்டமளிப்பு விழாவைத் துணை வேந்தரான நீங்கள் நடத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு, இனி ஆளுநர் நடந்து கொள்ளமாட்டார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளியின்போது மதுக்கடைகளில் கூடுதல் பாதுகாப்பு - அமைச்சர் முத்துசாமி