விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் -கெங்கவரம் காப்புக்காடு 1897ஆம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள் உள்ளன.
அழிந்து வரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எரும்பு தின்னி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள்,தேரைகள் உள்ளதாக உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பால் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஆர்.ராமன், எஸ்.விமல்ராஜ் ஆகியோர் செஞ்சி அருகே பாக்கம்மலைகளில் கடந்த 8 மாதங்களாக வன உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இவர்களின் தேடல் ஆராய்ச்சியில் அரியவகை சிலந்தி பூச்சி மற்றும் மூங்கில் குழி விரியன் என்கிற அரியவகை பாம்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர்.
மேலும் இக்குழுவினர் சானிவீரன், மலைபூவரசு போன்ற 21 வகை செடிகள், மரங்களை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு இப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் தோமர், “பாக்கம் மலைப்பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து அரசுக்கு ஏற்கெனவே திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள வனதுர்க்கையம்மன் கோயிலுக்கு பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளன.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் யாரும் தங்கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. அரசு எங்களிடம் கேட்டுள்ள சில தகவல்களை தொழில் நுட்ப மேம்பாட்டு முறையில் சமர்பித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பாக்கம் - கெங்கவரம் காப்புக்காடு பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைவது உறுதியாகியுள்ளது. விழுப்புரம் மட்டுமல்லாது அதனை சுற்றி உள்ள மாவட்ட மக்களுக்கும் இத்தகைய நிகழ்வை மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர்.
இதையும் படிங்க:தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் மோதல் - ஓட்டுநரை அரிவாளால் வெட்டியவர் கைது