விழுப்புரம்: மயிலம் அருகே தென் களவாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவர் தனது மகள்களான வினோதினி, ஷாலினி மற்றும் மகன் கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் திண்டிவனம் அருகே பெருமுக்கலை கிராமத்தில் உள்ள தனது தாயார் புஷ்பா வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார்
இந்நிலையில் தனது பாட்டி புஷ்பாவுடன் வினோதினி, ஷாலினி மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர்.
தன் கண்ணெதிரே பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பா நீரில் இறங்கி தனது பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றார். கல் குட்டை ஆழமான பகுதி என்பதால் எதிர்பாராத விதமாக நால்வரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் உடல்களை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெருமுக்கலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வு நடத்தப்படுமா?