விழுப்புரத்தை அடுத்த திருப்பச்சாவடிமேட்டில் உள்ள வித்யோதயா கல்வியியல் கல்லூரியில் நேற்று மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா சந்திராயன் 1 விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போதுதான் சந்திரனில் தண்ணீர், கனிம வளங்கள் உள்ளிட்டவை இருப்பதை கணித்து நம்மால் உலகிற்கு சொல்ல முடிந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் பல்வேறு நாடுகள் சந்திரனில் ஆய்வை தீவிரப்படுத்தின. இந்தமுறை அனுப்பவுள்ள சந்திராயன் 2 விண்கலத்தில் நான்கு சக்கர வண்டியை சந்திரனில் இறக்கி மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலம் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கு உதவுவதிலும், மக்கள் பயன்பாட்டிற்கு செயற்கைகோளை அனுப்புவதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
செயற்கைகோளை சிக்கனமாகவும், பயனுள்ள விதத்தில் தயாரிப்பதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் கல்வி நிறுவன செயலாளர் நடராஜன், விழுப்புரம் வித்யோதயா பள்ளி நிர்வாகி ஞானாம்பாள் விஸ்வநாதன், சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.