விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.4 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறைகளின் பக்கவாட்டுச் சுவற்றில் 'அசுத்தம் செய்யாதீர்', 'புகைப் பிடிக்காதீர்' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை எழுதுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கழிவறைகளைத் தொடர்ந்து சரியான முறையில் பராமரிக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் உரிமையாளர்களைக் கண்டித்தார்.
கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த பயங்கரமான விமான விபத்துகள்
அதேபோல் திறந்த வெளியில் தின்பண்டங்களை வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளர்களையும் ஆட்சியர் அண்ணாதுரை எச்சரித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் சேவை மைய அலுவலர்களிடம் அரசுப் பேருந்து சேவை இயக்கம் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வை பொதுமக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டினர். இதுபோல் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.