விழுப்புரம்: செஞ்சி அடுத்த கம்மந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. மாற்றுத்திறனாளியான இவர் அரசு வேலை வேண்டி பலமுறை விண்ணப்பித்தும், நேர்காணலில் கலந்து கொண்டும் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று(பிப்.06) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பொன்னுசாமி கூறியதாவது, "பலமுறை அரசு பணிக்காக நேர்காணலில் கலந்து கொண்டுள்ளேன். பணம் இல்லாத காரணத்தினால் தனக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பதிவின் மூலம் பல அரசு பணிக்கு நேர்காணலில் கலந்து கொண்டேன்.
இது சம்பந்தமாக கவர்னர் மற்றும் மாநில மாற்றுத்திறனாளி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். என்னுடன் நேர்காணலில் கலந்து கொண்ட அனைவருக்கும் கூட்டுறவுத்துறை, மருத்துவ உதவியாளர், இரவு காவலர், கிராம உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்" என்றார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் கி.பி. 11 நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு!