வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்களை கடந்த சில நாள்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அப்போது அந்த நபர், உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது. நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையேல், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் காவல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளை தொடர்பு கொண்ட நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகுமார் என்ற பெயரில் ஐஏஎஸ் அதிகாரி யாரும் சென்னை தலைமை செயலகத்தில் பணி செய்யவில்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், திமுக ஒன்றிய செயலரும், கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கஜேந்திரன் என்பவரையும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர், அவரையும் சென்னை வரும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக பிரமுகர் கஜேந்திரன், வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஜேந்திரனை தொடர்பு கொண்டு மிரட்டியது சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ் (29) என்பதும், இவர் போலியான கைப்பேசி எண் மூலம் பலரையும் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த சுபாஷை வேலூர் கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Bomb threat to Koyambedu bus stand:கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!