வேலூர்: குடியாத்தம் சித்தூர் கேட், காதர் பேட்டை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பீடி தொழில், ஹோட்டலில் தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு அன்றாட கூலி வேலை செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள குடும்பத் தலைவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் சுமார் 20க்கும் மேற்பட்ட பீடி தொழில் மற்றும் கூலி வேலை செய்யும் குடும்பத்தினருக்கு அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை வருவாய் துறையிடம் அணுகி கேட்டபோது தாங்கள் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்துவதால் தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், பீடி வேலை மற்றும் கூலி வேலை செய்யும் குடும்ப தலைவிகள் பெயர் மீது இரண்டு நிறுவனம் முதல் மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டதால் குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கட்டுமானப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தங்களது ஆவணங்களை கொடுத்ததாகவும், தங்களது பெயர்களில் போலி நிறுவனங்கள் நடத்தி ஜி.எஸ்.டி மோசடி நடைபெறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும், இதுவரை அந்த கட்டுமான நல வாரியத்தில் இருந்து எந்த ஒரு பயணும் அடையவில்லை என்றும் பாதிக்கப்ட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். எனவே வீடு வேலை செய்யும் குடும்ப தலைவிகள் பெயரில் போலி நிறுவனம் நடத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெரும் திட்டத்தால் பெண் கூலி தொழிலாளிகள் பெயரில் போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து முருகனின் வேல் திருட்டு..! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!