வேலூர்: காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு லாரியை நிறுத்தி அதில் இருந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் லாரியை தீவிரமாக சோதனை செய்தனர். ஓட்டுநர் இருக்கைக்கு கீழே அடியில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்தி மற்றும் கிளீனர் கல்லண்டகுமார் மாடசாமி, பிரேம், தங்கதுரை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனக்கா பள்ளியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, "இது போன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தொடரும். இதில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மேலும், குற்றவாளிகளின் வங்கி கணக்கும் முடக்கப்படும் என்றும் சோதனை சாவடியில் விழிப்புடன் பணிகள் இருந்து வாகன சோதனை செய்து கஞ்சாவை கைப்பற்றிய மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களையும் அவர் பாராட்டினார்.