வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பஜார் பகுதியில் சந்தோஷ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடை இருக்கிறது. இந்த கடையில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் சதாம் உசேன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நகை பட்டறையில் நகைகளை பராமரித்து வந்த ஷேக் சதாம், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 80 சவரன் நகைகளுடன் மே 1ஆம் தேதி மாயமானர்.
இதனையடுத்து, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சந்தோஷ் சந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையடித்த நபர் மேற்குவங்கத்தில் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை போலீசார், ஷேக் சதாமை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.