வேலூர்: கந்தனேரியில் பாஜக 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. அதில், பாஜக முக்கிய நிர்வாகிகளான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “தமிழகத்தில் தற்போது பட்டி தொட்டிகளில் எல்லாம் பாஜக வளர்ந்துள்ளது. பாரதப் பிரதமர் கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுகவும் காங்கிரசும் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பன்னிரெண்டாயிரம் கோடி ஊழல் செய்தார்கள். ஆனால், பாஜக ஊழல் இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது. மோடி அரசு பாரதத்தின் பெருமையை உயர்த்தி உள்ளது. நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். தமிழகத்திலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தமிழக மக்கள் அனுப்ப வேண்டும். அதில் குறிப்பாக, வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் எங்கு போனாலும் தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார்.
காசி தமிழ் சங்கத்தில், 23 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் நீட் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, சி.ஆர்.பி.எஃப் தேர்வு தமிழ் மொழியில் எழுத நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அனைத்து தேர்வுகளும் தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி, சீன அதிபர் இந்தியா வரும்பொழுது அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். சுற்றுலாவை மேம்படுத்தவே அவரை தமிழகத்திற்கு பிரதமர் அழைத்து வந்தார். காங்கிரஸ் 10 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்திற்கு 95 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது.
மேலும் மானியமாக 2 லட்சத்து 31,000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 3,710 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 50,000 கோடி மதிப்பீட்டில் சென்னை - பெங்களூர் அதிவிரைவு பாதை அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு மெட்ரோ பாதைகள் அமைக்க 72,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1,260 கோடி மதிப்பீட்டில் ஏர்போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 3,000 கோடி செலவில், கிழக்கு கடற்கரை சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ புதிய திட்டம் அமைக்கப்படவும் உள்ளது.
தமிழகத்தில் 56 லட்சம் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 84 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 62 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒரு கோடி ஏழைகளுக்கு ஐந்து கிலோ அளவில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் திறக்கப்படவில்லை என்று என்னைக் கேள்வி கேட்கிறார்கள். 18 ஆண்டு காலம் திமுக காங்கிரஸுடன் ஆட்சியில் இருந்தபோது ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட ஏன் கொண்டு வரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. 1,500 கோடி மதிப்பீட்டில் கோவையில் ESI மருத்துவ கல்லூரி கோவையில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அமித்ஷா பேசினார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது! அமித்ஷா பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி