வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நக்சலைட்டுகளால் வீர மரணம் அடைந்த காவல்துறை அலுவலர்களின் 39ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1979ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த கேசவன் ரெட்டியார் மற்றும் அவரது மனைவியை கொன்று பணம்-நகைகளை நக்சலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், அப்போதைய திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நக்சலைட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில், முக்கிய காரணமாக இருந்த நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரை பிடிக்க அப்போதைய ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தில் சிவலிங்கம் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலில் பேரில் அவரை தனிப்படை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் காவல்துறையினர், சிவலிங்கத்தை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலையில் அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டுதோறும் இந்த நாளில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று நக்சலைட்களால் வீரமரணம் அடைந்த நான்கு காவல்துறை அலுவலர்களுக்கும் 39ஆம் ஆண்டு வீரவணக்க நாள் அனுசரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 12 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் வான் நோக்கி மூன்று முறை சுட்டு 36 குண்டுகள் முழங்க மரியாதை செய்தனர்.