வேலூர்: கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் மேற்கொண்டு வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப்களின் மூலம் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தது.
புகார்களின் அடிப்படையில் மலைப்பகுதிகளில் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் ஊரல்களை பறிமுதல் செய்து அழித்து வந்தனர். மேலும் கள்ளச்சாராய வழக்கில் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதவிர, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, அதை கடத்துவது தொடர்பாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 63799 58321 என்ற வாட்ஸ்அப் எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிய 3 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 20 போலீசாரை, கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்ஐ ராஜசேகர் விரிஞ்சிபுரத்துக்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்ஐ ஜெகநாதன் பள்ளிகொண்டாவுக்கும், விஜயகுமார் மேல்பாடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தவிர, 2 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 17 தலைமை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், கே.வி.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், பள்ளிகொண்டா காவல் உதவி ஆய்வாளர் கதிர்வேலு ஆகியோர் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தவிர மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உள்பட 19 பேர் வேலூர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவலம் காவல் நிலையத்தில் பயிற்சிபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கும், வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் பயிற்சி பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பேரணாம்பட்டு காவல் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்து சுமார் 22 பேர் உயிரிழந்தது பெரும் சர்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கலிபோர்னியாவில் ராகுலுக்கு எதிராக பாஜகவினர் கோஷம்.. கூலாக டீல் செய்த ராகுல்!