வேலூர்: கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் பங்கு சந்தையின் நிலவரம் போல் அதிகரித்தும் குறைந்தும் வந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ 200 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன் புது விதமாக பொதுமக்கள் தக்காளி விலை குறைய வேண்டி கடவுள்களுக்கு, காணிக்கையாகவும், மாலைகளாகவும் தக்காளியை அணிவித்து பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட மக்களுக்கான நற்செய்தியாக தக்காளி வரத்து அதிகரிப்பால் நேதாஜி மார்க்கெட்டில் சனிக்கிழமை (ஆகஸ்ட். 5) தக்காளி விலை சரிந்து ஒரு கிலோ 60 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம், உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிறிது ஆறுதல் அடைந்தனர்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்கள், ஓசூர், ராயப்பேட்டை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளது.
அதன்படி, மார்க்கெட்டில் சனிக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுதையில், "வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் தக்காளி வரத்து குறைந்து 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.3,100 க்கு விற்பனை செய்யப்பட்டது.
சனிக்கிழமை மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து உள்ளது. மேலும் ஒரு பெட்டி தக்காளி ரூ.2,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் முதல் ரக தக்காளியின் மொத்த விலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய ரக தக்காளி ரூ.60 முதல் விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.