வேலூர்: வேலூர் மத்தியச் சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, பணியில் இருந்த சிறைக் காவலர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கொல்லப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி (37), சந்திரன் (55) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதையடுத்து, இவர்கள் இருவர் மீதும் கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி, இவர் இருந்த சிறையில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் இன்று (டிச.03) தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக சிறையிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் பாகாயம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக வேலூர் மத்தியச் சிறையின் தலைமைக் காவலர்களான சரவணன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் கமலநாதன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம் - இரண்டு கைதிகளிடம் என்ஐஏ தீவிர விசாரணை!