திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஜெய்பீம் நகரில் அம்மா உடற்பயிற்சிக்கூடம், சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது. அதை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தாமலேரிமுத்தூரில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் 8.2 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது. அதையும் அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். மேலும் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அதே பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும்; ஜோலார்பேட்டடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வாரச்சந்தையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் கே.சி. வீரமணி பேசுகையில், "ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அது போன்று நல்ல பல செயல் திட்டங்களை செய்து வருகிறார்" என்றார்.
தொடர்ந்து பேசும்போது, " நான் முன்னாள் சேர்மனாக இருந்தபோது 40 கடைகள் கொண்ட வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று 40 லட்சம் மதிப்பில் 60 கடைகள் கொண்ட வாரச் சந்தையை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இதேபோன்று இப்பகுதி கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீரைக் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: அரசுப் பேருந்து முதலுதவிப் பெட்டியில் மது கடத்தல் - கைதான நடத்துநர்!