வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த வெங்காயபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (65). கூலித்தொழிலாளியான இவர் தன் மனைவி தமிழரசியுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். முனிராஜ், தனக்கு சொந்தமான நிலத்தில் தற்போது புதிதாக வீடு கட்டி வருவதால், அதன் அருகில் பலரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென முனிராஜ் வீட்டின் அருகில் உள்ள பாபு என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால், தீ மளமளவென பரவி அருகில் இருந்த முனிராஜ்ஜின் வீட்டிற்கும் பரவியது. இதனால், இரண்டு வீடுகளிலும் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புதுறையினர் வருவதற்குள் பாபுவின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மேலும், முனிராஜ்ஜின் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்த தீயணைப்பு துறையினர் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர். எனினும், அங்கு புதிய வீட்டிற்காக வாங்கி வைத்திருந்த மர சாமான்கள், வீட்டில் இருந்த மற்ற பொருட்களள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம் மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது யாரேனும் செய்த சதியா என்ற கோணத்தில் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.