வேலூர்: வேலூர் வட்டம் கணியம்பாடி ஊராட்சியில் மாவட்ட நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து சீமைகருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று (ஆகஸ்ட் 22) புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா ஆகும்.
சீமைக்கருவேல மரங்கள் நிலத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று நீரை உறிஞ்சி விடுவதால் அருகில் உள்ள மற்ற தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் செய்து பிற தாவரங்களின் வளர்ச்சியை இது தடை செய்கிறது. மழை இல்லாத காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றில் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது.
மேலும் இது மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இந்த தாவரத்தின் ஆணிவேர் மட்டுமின்றி பக்க வேர்களும் வலிமையானவை. எனவே, மழைநீர் நிலத்தை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடை செய்கின்றன. மேலும், இத்தாவரம் மற்ற தாவரங்களை விட அதிகளவு கார்பன் டை ஆக்ஸ்டை (Carbon dioxide) வெளியிடுகிறது. இதனால் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் உயர்வு; வாகன ஓட்டிகள் சாலை மறியல்!
இதையடுத்து, கணியம்பாடி ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இப்பகுதியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி, குளங்களை தூர்வாரி ஏரிகளை பலப்படுத்தி, ஏரியின் கரையோர பகுதிகளை பலன் தரக்கூடிய மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது. இந்த குளங்களை சுத்தப்படுத்துவதால் மழைநீர் தேங்கி சுற்றுவட்டப் பகுதியில் உள்ள விளை நிலங்கள் செழிக்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்” என்றார்.
தொடர்ந்து, நெல்வாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும், கனிகிணியான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளையும் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் செந்தில், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யகமல் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இந்த மரங்களால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் வருவதால், சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டு எடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அகற்ற வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்களை அனைத்து மாவட்டங்களைலும் இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இதையும் படிங்க: இளம் பேச்சாளர்கள் எல்லாம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு - முதல்வர் பெருமிதம்