வேலூர்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். காட்பாடியை அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பிரபு (40) என்பவர், அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு, பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். இது குறித்து பிரபு கூறுகையில், 'நான் எனது தாயாருடன் தனி வீட்டில் வசித்து வருகிறேன். எனது சகோதரிகள் பாகப்பிரிவினை என்ற பெயரில் பாதி சொத்தை எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது மீண்டும் சகோதரிகள் இரண்டு பேரும் புரோக்கர் ஒருவருடன் சேர்ந்து, மேலும் எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தாலும், எங்களை எதுவும் செய்ய முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தீக்குளிக்க முயன்றேன்’ எனத் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ லதா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், 'பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம் சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்கக்கூடாது. குறிப்பிடப்பட்ட ஊராட்சிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டால் மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மாவட்ட தலைநகரத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம்சேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.
இதேபோல அ. கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில், 'தங்கள் கிராமத்தின் அடையாளமாக கட்டுப்படி ஜங்ஷனில் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வகையில் இருந்த நுழைவுவாயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. மீண்டும் கட்டுப்படி ஜங்ஷனில் நுழைவுவாயில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்' என மனு அளித்தனர்.
இதையும் படிங்க: vellore tidel park: வேலூர் மினி டைடல் பூங்கா: முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!