வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள 11 இடங்களில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயண நினைவு மூலம் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வருகை தந்து கொடியேற்று வைத்தார். அவரை கட்சி சார்பில் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
முதலாவதாக மாமுண்டூர் பகுதியில் கட்சி கொடியேற்றிய பின்னர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் ராகுல் காந்தியை நேரடியாக சந்திக்க பயப்படுவதால் அவதூறு வழக்கை பயன்படுத்தி அவரை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மீண்டும் சுற்றுலா பயணிகளுடன் களைகட்டிய சுருளி அருவி : சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கிய வனத்துறை
காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு சாதகமான தீர்ப்பு நிச்சயம் வரும் என உறுதிபட தெரிவித்தார். தமிழகத்தில் ஆளுநர் ஆளும் திமுக அரசிற்கு எதிராக தனது கருத்தை பேசிவிட்டு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பின்னர் அதனை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இதன் மூலம் ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடையே மேடையில் பேசிய போது, காய்கறிகளின் விலை உயர்வை குறிப்பிட்ட அவர் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்களுக்கு சிறிய அளவில் கடன் உதவி அளிப்பதன் மூலம் காய்கறி உற்பத்தியை பெருக்கி விலை உயர்வை கட்டுப்படுத்தலாம் என கூறினார்.
ஆனால் இதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை என குற்றம் சாட்டிய அவர் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதால் திமுகவிற்கு எதிராக மத்திய அரசு பல விமர்சனங்களை வைத்து வருவதாகவும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: WB Panchayat Polls: வன்முறைகளுக்கு மத்தியில் மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!