வேலூர்: குடியாத்தம் காக்காதோப்பு பகுதியில் அத்தி கல்விக் குழுமம் சார்பில் சாய்பாபா கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று (நவம்பர் 24) நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "புதுச்சேரியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்து சென்றுள்ளது. மழைபாதிப்பு நிவாரணமாக ரூபாய் 300 கோடி நிதி கேட்டுள்ளோம். புதுச்சேரி கடற்கரை அதிகமாக உள்ள மாநிலமாக உள்ளது. மீனவர்கள் பாதிக்கப்படாமலும் தூண்டில் வலைகள் அமைப்பதற்கும், கடலரிப்பை தடுப்பதற்கும் நிரந்தர தீர்வு காண திட்டம் மேற்கொண்டுள்ளோம். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடல் வழி போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். கடலில் விபத்து ஏற்படும்போது மீனவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய போர்ட் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.
இது புதுச்சேரி மீனவர்களை பாதுகாக்க சிறந்த திட்டமாக அமையும். மக்கள் அனைவரும் மழையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வானிலை அறிக்கையில் இன்னும் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அதிக மழை பெய்யும் என கூறி உள்ளனர். நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். மழைக்கால நோய்களிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜேபி நட்டாவிற்கு கோவையில் உற்சாக வரவேற்பு